இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலின் திருமணம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி லண்டனுக்கு அருகே உள்ள வின்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.2 கிலோ எடை இருந்தது.

இதுகுறித்து இளவரசர் ஹாரி கூறும்போது, ‘‘மேகனும், குழந்தையும் நலமாக உள்ளனர். நான் இதுவரை கனவிலும் காணாத மிகவும் அற்புதமான அனுபவம் இது. ஒவ்வொரு தந்தையையும் போல நானும் எனது மனைவியை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்றார். குழந்தைக்கான பெயரை தேர்வு செய்வதில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழந்தை ராணி எலிசபெத்தின் 8-வது கொள்ளுப்பேரக் குழந்தையாகும். இங்கிலாந்து மன்னர் பதவிக்கான வரிசையில் 7-வதாக இந்த குழந்தை இடம்பெற்றது.