ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்

2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி தவறான பிரச்சாரம் நடந்தது, ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதன் மூலம். காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிருபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது

“2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி பாஜகவினர் தவறான பிரச்சாரம் செய்தனர். ஆனால் இது, தவறு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் நல்லாட்சி தந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. திமுகவும் தவறு செய்யவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது” எனக் கூறினார்.

காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ கூறியதாவது:

“2ஜி வழக்கை முன்னிறுத்தி 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுகவிற்கு எதிராக மிக மோசமான பிரச்சாரத்தை பாஜகவும், பிரதமர் மோடியும் செய்தனர். ஊர் ஊராக சுவரொட்டி ஒட்டி தவறான பிரச்சாரம் செய்தனர். ஆனால், 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பிரச்சாரம் தவறு என்பது உறுதியாகியுள்ளது. தவறான பிரச்சாரத்திற்காக பாஜவினர் மன்னிப்பு கேட்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.