ஆளும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரடி சவால் – கங்கணம் கட்டும் கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மும்பைக்கு வந்துள்ள நிலையில், இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம், நாளை உங்கள் அடாவடித்தனம் ஒடுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில் பிற்பகல் 3.40 மணியளவில் காணொளி வாயிலாக அவர் எதிர்வினையாற்றினார்.

அதில் “உத்தவ் தாக்கரே, எனது கட்டடத்தை இடித்ததன் மூலம் என்னை பழிவாங்கியதாக நினைக்கிறீர்கள். காலம் மாறும், உங்களுடைய அடாவடித்தனம் மாறும். இன்று எனது வீட்டை நீங்கள் இடிக்கலாம். நாளை உங்கள் அடாவடித்தனம் நொறுக்கப்படும். எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. உங்களுடைய செயல் கொடூரமானது, பயங்கரமானது” என்று கூறி காஷ்மீரி பண்டிட் நிலையை மேற்கோள்காட்டி கருத்துகளை அவர் பதிவிட்டுள்ளார்.

மும்பை பாலி ஹில் பகுதியில் மாநகராட்சி ஊழியர்களால் பகுதியளவு இடிக்கப்பட்ட தமது அலுவலக கட்டடத்தின் காட்சிகளை டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் #DeathOfDemocracy (ஜனநாயக படுகொலை) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு ஐந்து காணொளிகளை அவர் பகிர்ந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இன்று எனது வீட்டை இடித்து விட்டீர்கள். நாளை உங்களுடைய அடாவடித்தனம் நொறுக்கப்படும். காலச்சக்கரத்தின் சுழற்சி இது. காலம் மாறிக்கொண்டே இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் அயோத்தியா மட்டுமின்றி, காஷ்மீர் பற்றியும் படம் எடுப்பேன். காஷ்மீரி பண்டிட்டுகள் அனுபவித்தவற்றை நான் அறிவேன். அவர்களின் வலியை நானும் அனுபவிக்கிறேன். இப்படி எனக்கு நடப்பதும் நல்லதற்குத்தான். ஏனென்றால் இதில் முக்கியத்துவம் உள்ளது என்று கங்கனா பேசினார்.

முன்னதாக, மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் அவருக்கு ஆதரவாக கார்னி சேனை அமைப்பினரும், எதிராக சிவசேனை தொண்டர்களும் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்திய உள்துறை அமைச்சக உத்தரவின்படி சண்டீகரிலும் மும்பையிலும் கங்கனா ரனாவத்துக்கு மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.

விமான நிலைய வளாகத்தில் கங்கனாவுக்கு ஆதரவாக கார்னி சேனை அமைப்பினரும் எதிராக ஆளும் சிவசேனை கட்சித் தொண்டர்களும் கோஷமிட்டனர். இதனால் முக்கிய பிரமுகர்கள் வாயில் வழியாக அவரை பாதுகாப்புப் படையினர் அழைத்துச் சென்றனர்.

கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டடத்தை, மேலும் இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் இன்று நண்பகலில் தடை விதித்து உத்தரவிட்டது.

அவரது கட்டடத்தின் அமைப்புகள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது சட்ட விரோதம் என்று கூறி மும்பை மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை காலையில் இடிக்கத் தொடங்கினர்.

மும்பையில் திரைப்பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பகுதி பாந்த்ரா. அங்கு கங்கனா ரனாவத்துக்கு சொந்தமான கட்டத்தில் சட்டவிரோதமாக மாற்றங்கள் செய்யப்பட்டதாக ப்ரிஹான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் என்ற மும்பை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டி அவருக்கு 2018இல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், அவரது கட்டடத்தை இடிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கிய வேளையில், கங்கனா ரனாவத் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில், மாநகராட்சி நடவடிக்கைக்கு தடை கோரி முறையிடப்பட்டது.

இதை பரிசீலித்த நீதிமன்றம், “கட்டடத்தை மேலும் இடிக்க வேண்டாம் என்று இடைக்கால உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிஎம்சி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கட்டட இடிக்கும் பணியை தொடரக்கூடாது” என்று உத்தரவிட்டது.

முன்னதாக,தமது கட்டடத்தில் சட்டவிரோத மாற்றங்கள் ஏதுமில்லை என்று கூறி அது தொடர்பான படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் கங்கனா பகிர்ந்தார். அந்த இடுகையில், நான் எப்போதும் தவறு செய்யவில்லை என்று குறிப்பிட்டு, எனது மும்பை இப்போது ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீராகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விவகாரத்தை டிவிட்டரில் பதிவிட்ட கங்கனா ரனாவத், ஒரு இடுகையில், “சஞ்சய் ரெளட் என்னை வெளிப்படையாக மும்பைக்கு வரக்கூடாது என்று மிரட்டியுள்ளார், மும்பையில் தெருக்களில் காணப்படும் விடுதலை தொடர்பான சுவரோவியங்கள் மற்றும் இப்போது உள்ள அச்சுறுத்தல் ஆகியவற்றால் மும்பை ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உணரப்படுகின்றது?” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்து, மகராஷ்டிராவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் இன்று மும்பை வரும்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அவரது தந்தை சார்பில் ஹிமாச்சல பிரதேச காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, அவருக்கு மத்திய காவல் பாதுகாப்பு வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையின் பாலி ஹில்லில் உள்ள கங்கனாவின் அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.

அதனை தொடர்ந்து, தனது கட்டடம் இடிக்கப்படலாம் என்று கங்கனா கூறியிருந்தார்.

ஆனால், செவ்வாய்கிழமை அன்று மாநகராட்சி அதிகாரிகள் தமது வீட்டுக்கு வரவில்லை என்றும் மாறாக தனது கட்டடத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என்றும் கங்கனா கூறியிருந்தார்.

மேலும் “நான் 15 ஆண்டுகள் உழைத்து மும்பையில் மணிகர்ணிகா ஃபிளிம்ஸ் என்ற அலுவலகத்தை ஆரம்பித்தேன். இதுதான் என் கனவாக இருந்தது. எனக்கான ஒரு தனி அலுவலகம். ஆனால், அந்த கனவை அவர்கள் உடைப்பதற்கான நேரமாக இது இருக்கிறது. திடீரென மாநகராட்சி அதிகாரிகள் வந்து என் அலுவலகத்தை அலக்க ஆர்ம்பித்தனர். சுற்றி இருப்பவர்களையும் தொந்தரவு செய்தார்கள். நாளை இந்த கட்டடத்தை இடிக்கப்போவதாக கூறுகிறார்கள்” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான் இன்று அவருக்கு சொந்தமான கட்டடம் பகுதியளவு புதன்கிழமை இடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் முழு சர்ச்சையும் திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடையது.

பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கும் போதை மருந்து மாஃபியாவிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர், தனக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைத்தால் பாலிவுட்டுக்கும் போதை மருந்து மாஃபியாவுக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த முடியும் என்று கங்கனா ட்விட்டரில் எழுதினார்.

உண்மையில், கங்கனா கடந்த சில நாட்களாக தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார்.

அவர் மாஃபியா மற்றும் குண்டர்களை விட மும்பை காவல்துறைக்கு அஞ்சுவதாக எழுதினார். மும்பையில் எனக்கு ஹிமாசல பிரதேச அரசாங்கத்திடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பாதுகாப்பு தேவை. மும்பை காவல்துறையின் பாதுகாப்பு தேவையில்லை.

இதே ட்வீட்டுக்கு பதிலளித்த சஞ்சய் ரெளட், மும்பை காவல்துறைக்கு மிகவும் பயப்படுகிறார் என்றால் அவர் மும்பைக்கு வரக்கூடாது என்று கூறியிருந்தார்.

கங்கனா ரனாவத்துக்கு வெளிப்படையாகவே சிவசேனை தலைவர்கள் மிரட்டல் விடுத்ததால் அவர் 9ஆம் தேதி (இன்று) மும்பை செல்லும்போது அவருக்கு பாதுகாப்பு வழங்க ஹிமாச்சல பிரதேச அரசு பரிசீலித்து வந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.