ஆர்.கே.நகர் தோல்வி: திமுக ‛சால்ஜாப்பு’

சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., படுதோல்வி அடைந்து டிபாசிட்டையும் பறிகொடுத்தது. இது குறித்து, கட்சியின் பல்வேறு மட்டங்களிலும், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்கள் கடுமையாக உள்ளன.இதையடுத்து, ஸ்டாலின் தரப்பினர் தேர்தலுக்கு முன் என்ன நினைத்து, இடைத்தேர்தலை எதிர்கொண்டது, என்பது குறித்து, கட்சியின் பல மட்டத் தலைவர்களிடமும் எடுத்துக் கூறி வருகின்றனர்.அவர்கள் கூறி வருவதாவது:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம்தான் பிரதானம் என்பதை தி.மு.க., முன் கூட்டியே கணித்து விட்டது. அதனால், பணத்தை வாரி இறைக்கத் திட்டம் தீட்டிய மதுசூதனன் மற்றும் தினகரனோடு பணம் கொடுத்து போட்டிப் போட வேண்டியதில்லை என முடிவெடுக்கப்பட்டு விட்டது. அதனால்தான், கடைசி வரை, தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.எப்படி இருந்தாலும், தி.மு.க.,வின் அடிப்படை ஓட்டுக்களான 58 ஆயிரம் ஓட்டுக்கள் கிடைத்து விடும். அப்படி கிடைத்து விடும் பட்சத்தில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., மற்றும் பொது வாக்காளர்களின் ஓட்டுக்களைப் பெற்று, தினகரன் வெற்றியடைவார் என, தி.மு.க., கணக்குப் போட்டு, அதற்கேற்ப காய் நகர்த்தியது.தினகரன் வெற்றி பெற்றால், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் பக்கம் செல்வர். எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும். சட்டசபைக்கு தேர்தல் வரும். அ.தி.மு.க.,வே இரு அணிகளாக களத்துக்கு வந்து மோதும் போது, அ.தி.மு.க., ஓட்டுக்கள் இரண்டாக சிதறும்.தி.மு.க., தனி அணியாக போட்டியிடும்போது, ஆட்சியை பிடித்து விடலாம் என்பதுதான், தி.மு.க., தலைமையின் எண்ணமாக இருந்தது.தி.மு.க., தலைமை கணக்கு போட்டப்படியே, தினகரன் வெற்றி பெற்று விட்டார். ஆனால், கூடுதல் ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்றது அதிர்ச்சி. அதே நேரம், தி.மு.க.,வுக்கு டிபாசிட் போனதும் அதிர்ச்சிதான்.

தினகரன் வெற்றியைத் தொடர்ந்து, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், தினகரன் பக்கம் செல்வர். அதனால், எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் என போட்ட கணக்கும் தவறி விட்டது. இதனால்தான், தி.மு.க.,வுக்கு சிக்கல் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும், விரைவில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும். அடுத்து, தி.மு.க.,வே தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்.இவ்வாறு, அவர்கள் கூறிவருகின்றனர்.