ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி உறுதி: மிரட்டல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய ஆலோசித்து வருகிறேன்

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதன்முதலாக போட்டியிட உள்ளார். அவருடைய வீட்டில் பேரவை நிர்வாகிகளிடம் தேர்தல் வியூகம் குறித்து நேற்று காலை ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜெ.தீபா தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எப்போது வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்?
பதில்:– வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர்களையும், தொகுதியில் உள்ள சிலரையும் கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது. அதற்கு பிறகு ஓரிரு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்வேன்.

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதி மக்களிடம் என்ன வாக்குறுதி அளிக்க உள்ளீர்கள்?
பதில்:– வாக்குறுதி அளிப்பதற்கு முன்பாக, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இருந்த இடத்தில் இருந்து தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுடன், அவர்களுடைய தேவைகள் குறிப்பாக பெண்களுக்காக ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

தொலைபேசியில் மிரட்டல்

கேள்வி:– எப்போது பிரசாரத்தில் இறங்க உள்ளீர்கள்? எத்தனை நாட்கள் பிரசாரம் செய்வீர்கள்?
பதில்:– ஓரிரு நாட்களில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளேன்.

கேள்வி:– நீங்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சிலர் சூழ்ச்சி செய்வதாக கூறுகிறீர்கள், அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்?
பதில்:– அவற்றையெல்லாம் எதிர்கொள்வது கடினமானதுடன், பெரிய போராட்டமாகவும் இருக்கும் என்று எனக்கு தெரியும். நேற்று (நேற்று முன்தினம்) கூட சிலர் தொலைபேசியில் என்னை மிரட்டும் சம்பவங்கள் நடந்தது. தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வி அடைவீர்கள், அரசியலில் இருந்து ஓடவைப்போம் என்றெல்லாம் மறைமுகமாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். கூலிப்படை போன்று தேர்தல் நேரத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சிப்பார்கள். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இருக்காது.

கூடுதல் பலம்

கேள்வி:– ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பின்னர் இப்போது உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?
பதில்:– தியானம் செய்துவிட்டு வந்தபின்னர் கூடுதல் பலம் கிடைத்ததாக நினைக்கிறேன். வேட்பு மனு தாக்கல் செய்ய செல்வதற்கு முன் மீண்டும் ஒருமுறை ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு செல்வேன்.

கேள்வி:– இடைத்தேர்தலில் உங்களுக்கு பிற கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து உள்ளார்களா?
பதில்:– கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவை தேடி நான் செல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க. (சசிகலா) மற்றும் தி.மு.க. தவிர வேறு எந்த கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறேன்.

கேள்வி:– எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டு மக்கள் மனதில் இடம்பிடித்தார், அதேபோன்று சென்டிமெண்ட் ஏதாவது உங்களிடம் உள்ளதா?
பதில்:– அதுபோன்று எதுவும் இல்லை. மக்கள் விரும்பும் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் முறையாக விண்ணப்பித்து பெற்று போட்டியிடுவேன். தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.

பொறுத்து இருந்து பாருங்கள்

கேள்வி:– ஆர்.கே.நகர் தொகுதியில் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்?
பதில்:– தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே ஆர்.கே.நகர் தொகுதியில் எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரியும். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா இருந்த இடத்தில் என்னை தவிர வேறு யாருக்கும் தொகுதி மக்கள் இடம்தரமாட்டார்கள். அ.தி.மு.க.வினர் செய்யும் பொய் பிரசாரத்தை புறக்கணிப்பதுடன், போலிகளையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.

கேள்வி:– இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கும் எண்ணம் உள்ளதா?
பதில்:– யாரிடமும் ஆதரவு கேட்டு நான் போகவில்லை. பொறுத்து இருந்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.