ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலைநிறுத்த தான் -ஓபிஎஸ் அணி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

ஆர்.கே.நகர்த் தொகுதியில் நாங்கள் பணம் கொடுத்ததாக ஜி.ராமகிருஷ்ணன் கூறுவது உண்மைக்கு புறம்பானது. பணப்பட்டுவாடா செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு பொய்யானது இதனை கண்டிக்கின்றோம்

பணம் கொடுத்ததாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியது.

டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்தார் என்பது உலகமறியும்.ஆர்.கே.நகர்த்தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான். வருமான வரித்துறை ஆவணத்தில் உள்ள 89 கோடி ரூபாய் யார் கொடுத்தது. ‘ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பார்கள். டாக்டர் பாலாஜியே போதும், ஐந்து லட்ச ரூபாய் வாங்கியது உண்மை என்று சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் அந்த டாக்குமென்ட்டில் எவ்வளவு இருக்கோ எல்லாமே உண்மைதானே. இந்த 89 கோடியும் உண்மைதானே. எடப்பாடி பழனிசாமி 11 கோடி ரூபாய் பிரித்துக்கொடுத்தது உண்மைதானே. ஏனென்று சொன்னால் இவர்களே தயாரித்துக்கொண்ட ஒரு டாக்குமென்ட் என்ன சொல்கிறது. ஐந்து லட்ச ரூபாய் வாங்கியது உண்மையென்று டாக்டர் பாலாஜி கூறுகிறார். இவருக்கு என்ன பிரச்னையென்று தெரியாது. இது எங்கேங்கெல்லாம் இடிக்கும் என்று.
ஏழு அமைச்சர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றும் சூழ்நிலையை டி.டி.வி.தினகரன் உருவாக்கியிருக்கிறார். ஒரு சமூக விரோத சக்திகள் எவ்வளவு பெரிய குற்றத்தை செய்துவிட்டு ஆதாரம் எங்கே என்று கேட்கிறார்கள் என்றால், இவர்களின் ஆட்சி தொடர்ந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் மதுசூதனன் வெற்றி பெறுவார்.

இந்த தேர்தலோடு அவர்களின் அரசியல் பயணம் முடிந்திருக்கும். அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கம் மீண்டும் ஜெயலலிதாவின் புகழ்பரப்பக்கூடிய ஒரே இயக்கமாக மாறியிருக்கும். இடைப்பட்ட இந்த நேரத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் இந்த குடும்பம் வெளியேற்றப்படும். நிச்சயமாக ஓ.பன்னீர்செல்வம் இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்பார். இந்த மாநிலத்தின் முதல்வர் பொறுப்பையும் ஏற்பார்” என்றனர்.