ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது

”ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றி பெற்றது போல், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறமுடியாது,” என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. இதில், பேசிய பன்னீர் செல்வம், 2016 தேர்தலில் வெற்றி பெற்றது முதல்,

அவர் ஆட்சி அமைத்தது வரை நிகழ்வுகளை கூறினார்.

சசிகலா தரப்பினர், ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற நினைத்ததாகவும், அது நடக்கக்கூடாது என்பதற்காக, முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்தார்.

தினகரன் குறித்து அவர் பேசியதாவது: ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், இதுவரை மன்னிப்பு கடிதம் கொடுக்கவில்லை.அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைக்கிறார். எங்களை பிரிக்க முடியாது. ஆர்.கே.நகரில், 20 ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய் தந்தார்கள். அது, திருப்பரங்குன்றத்தில் செல்லாது.

50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”திருப்பரங்குன்றம், அ.தி.மு.க., கோட்டை; நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில், ஏழரை கோடி மக்களுக்கும் முதல்வராக ஆசை உள்ளது. அதுபோல், நடிகர், விஜய்க்கும் ஆசை,” என்றார்.