ஆர்.கே.நகரில் தினகரனை தோற்கடிப்பேன் : மதுசூதனன் சூளுரை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன் என்று மதுசூதனன் சூளுரைத்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார். சென்னையில் நடந்த ஓபிஎஸ் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்’ என்று அறிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ”நான் ஆர்.கே.நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தொகுதி மக்களை நன்கறிவேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று டிடிவி தினகரனை தோற்கடிப்பேன்” என்று கூறினார்.

மதுசூதனன் 1991-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர். அப்போதைய அதிமுக அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகவும் இருந்தார். 2015, 2016 தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக மதுசூதனன் இருந்தார்.