ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் ரத்தன் டாடா

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து, மும்பையில் நடக்கும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், சமீபத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆக.,24ல், மும்பையில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், ‘நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின்’ பொன் விழா நிகழ்ச்சியில், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, 81, பங்கேற்க உள்ளதாக, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியின் செயலர் கூறியதாவது: மும்பையில், டாடா நினைவு மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள, நானா பால்கர் ஸ்மிரிதி சமிதியில், புற்று நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்த சமிதி துவக்கப்பட்டபோது, நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்கவதற்கு, டாடா குழுமம் நிதியுதவி செய்தது. இந்நிலையில், ஆக.,24ல், சமிதியின் பொன் விழாவும் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும்படி, ரத்தன் டாடாவை அழைத்தோம். எங்களை அழைப்பை அவர் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை. எனவே, பொன் விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.