ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

திருவண்ணாமலை, தீப திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார்.

வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீபதிருவிழாவில், 10ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அப்போது வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள, ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தை மாதத்தில் நடக்கும்திருவூடல் திருவிழா மற்றும் மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே, அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார்.தீப திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, அய்யங்குளத்தில் நடந்த தெப்ப உற்சவத்தில், பராசக்தி அம்மன், மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.