ஆன்மிக அரசியல், வீடியோ காட்சி பற்றி ரஜினிகாந்த் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் பற்றிச் சொல்லும் போது ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டார். இதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிச.31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார். அப்போது அவர் தான் அரசியலில் இறங்குவது உறுதி என்று தெரிவித்த அவர் தான் 2021 சட்டமன்ற அரசியலில் நேரடியாக குதிக்கப்போவதாகவும், அதுவரை தனது ரசிகர்கள் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத்  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார். தனது பாதை ஆன்மிக அரசியல் பாதை என்று தெரிவித்து விவாதத்தை தூண்டிவிட்டார்.

ரஜினி ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தாலும் குறிப்பிட்ட மதத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் அவரது ஆன்மிக அரசியல் பாஜக சார்ந்த அரசியல் என்று விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் ராமகிருஷ்ண மடத்தில் துறவிகளைச் சந்தித்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகின. அதில் ரஜினி ஆன்மிக அரசியல் என்று கூறியுள்ளார் என்று கூறும் துறவி ஒருவர் அப்படியென்றால் மதச்சார்ப்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் கிடையாது என்று கூறுவார்.

இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய சூழ்நிலையில் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்திடம், ”உங்கள் வீடியோ காட்சியில் ஒரு துறவி மதச்சார்ப்பின்மை என்று சொல்லிக் கொள்ளும் அரசியல் இல்லை என்று கூறுகிறாரே, ஆன்மிக அரசியல் என்றால் என்ன?”  என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த, ”ஆன்மிக அரசியல் என்றால் உண்மையான நேர்மையான நாணயமான சாதி மதச்சார்ப்பற்ற அறவழி அரசியல், ஆன்மிகம் ஆத்மாவோடு தொடர்புடையது” என்று தெரிவித்தார்.

மக்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதன் மூலம் சாதி, மதச்சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.