ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது 3 வயது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகம் என தெரிய வந்துள்ளது.

சந்திரபாபு நாயுடு கடந்த எட்டு ஆண்டுகளாக தானாக முன் வந்து ஆண்டுதோறும் தனது குடும்ப சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி இந்த ஆண்டுக்கான சொத்து மதிப்பு விவரத்தை சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் நேற்று மாலை வெளியிட்டார்.

தேசிய அளவில் அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. இந்த சங்கம் இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டிலேயே மிகப்பெரிய பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு தான். அவரது சொத்து மதிப்பு ரூ.177 கோடி என தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால், நேற்று வெளியிடப்பட்ட சொத்து மதிப்பு புதிய தகவலை தருகிறது.

சந்திரபாபு நாயுடுவின் மொத்த குடும்ப சொத்து மதிப்பு கடந்த ஆண்டிலிருந்து ரூ.12.5 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.69.28 கோடி; இந்த ஆண்டு சொத்து மதிப்பு ரூ.81.63 கோடி. இதில் சந்திரபாபு நாயுடு சொத்து ரூ.2.53 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு ரூ.25 கோடியில் இருந்து ரூ.31 கோடியாக அதிகரித்துள்ளது.

மகன் நாரா லோகோஷின் சொத்து ரூ.15.21 கோடியில் இருந்து ரூ.21.40 கோடியாக அதிகரித்துள்ளது. அவரது 3 வயது மகன் தீவன்ஷ் சொத்து ரூ.11.54 கோடியில் இருந்து ரூ.18.71 கோடியாக அதிகரித்துள்ளது. பேரன் சொத்து, தாத்தா சொத்தை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது