ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைப்பார்? இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு

யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதில் இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பரபரப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து முதல் – அமைச்சர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் 2 மாதம் மிகத்திறமையான, சீரான, அமைதியான ஆட்சியைத் தந்தார். இந்த நிலையில் முதல் – அமைச்சர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால் கடந்த 5-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகினார். 7-ந்தேதி அவர் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். அவரை தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரித்தனர். என்றாலும் 120-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சசிகலா கட்டுப்பாட்டில் இருந்ததால் அவர் ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டுகள் தண்டனை விதித்ததால், அவரது முதல் – அமைச்சர் கனவு தகர்ந்தது.

இதையடுத்து அவர் முதல் – அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியையும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனையும் நியமனம் செய்து விட்டு சிறை சென்றுள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்ட இந்த பரபரப்புகளால் கடந்த 10 நாட்களாக முதல் – அமைச்சராகப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. சசிகலா மீது வழக்கு இருந்ததால் அவரை பதவி ஏற்க கவர்னர் அழைக்காமல் இருந்தது சரியான முடிவு தான் என்பதை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண் டனர்.

ஆனால் சசிகலா சிறை சென்றபிறகு, எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறி கடிதம் கொடுத்தப் பிறகும் அவரை கவர்னர் ஏன் இன்னமும் பதவி ஏற்க அழைக்காமல் உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் கவர்னரை சந்தித்து பேசி வந்தாலும் அவரால் ஆட்சி அமைக்க இயலுமா? என்ற சந்தேகம் அனைத்துத் தரப்பினரிடமும் உள்ளது. எனவே கவர்னர் முதலில் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார்? பன்னீர்செல்வத்தையா? அல்லது எடப்பாடி பழனிச் சாமியையா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு கவர்னரை இரு அணியினரும் சந்தித்துப் பேசியதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

நேற்று கவர்னரிடம் நினைவூட்டல் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி கொடுத்து, தனக்கு பெரும்பான்மை நிரூபிப்பதற்கான உரிமை உடனே வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கவர்னரை சந்தித்து பேசிய பின்னர் பழனிசாமி தரப்பில், தமிழகத்தில் அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சி தொடரவேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை கவர்னரிடம் சொன்னோம். சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. எனவே, அமைச்சரவை அமைக்க எங்களுக்கு அழைப்பு விடுத்து, ஜனநாயக மரபை காக்கவேண்டும் என்று கவர்னரிடம் வலியுறுத்தினோம்.

நாளை (இன்று) எங்களுக்கு அழைப்பு விடுப்பதாக நம்புவதாகவும் கவர்னரிடம் தெரிவித்தோம். அவரும் எங்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து முடிவு எடுப்பதாக கூறினார். எனவே, ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு செல்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வத்திடம் 8 எம்.எல்.ஏ.க்கள் தான் இருக்கின்றனர். எங்களிடம் 124 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 8 பெரியதா?, 124 பெரியதா? என்பதை நீங்களே (பத்திரிகையாளர்கள்) யோசியுங்கள். அம்மாவின் அரசு தொடர, மக்கள் பணியாற்ற 124 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பன்னீர் செல்வம் தரப்பும் கவர்னரை சந்தித்து பேசியது. நேற்றிரவே கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றிரவு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் வெளி யிடப்படவில்லை.

இன்று காலை வரையில் பதவிஏற்பு ஏற்பாடுகளும் நடக்காததால் கவர்னரிடம் இருந்து அழைப்பு வருமா? என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், எடப்பாடி பழனிச்சாமி அணியினரும் எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டு உள்ளனர்.

இதற்கிடையே கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்ட நிபுணர்களுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனையும் பெற்று வருகிறார் என கூறப்படுகிறது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோத்தகியிடமும் கருத்துக்களை கேட்டு அறிந்தார். பெரும்பான்மை ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் கொடுத்தவரை ஆட்சி அமைக்க அழைத்து விட்டு, அவரை பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடலாம் என்று கவர்னரிடம் சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர். இதை கவர்னர் விதயாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அந்த அடிப்படையில் 124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலை கொடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பார் என்று தெரிகிறது. இவ்விவகாரம் தொடர்பாக இன்று எந்த நேரத்திலும் கவர்னரிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. எங்களை பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதவி ஏற்பை அடுத்து புதிய முதல் – அமைச்சர் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க அவர் உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.