ஆக. 5 முதல் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணம்: நாஞ்சில் சம்பத் தகவல்

அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒருமணி நேரம் இச்சந்திப்பு நடைபெற்றது. பின்னர் நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு அறிமுகப்படுத் தியுள்ள ஜிஎஸ்டியால் மாநிலத்தின் உரிமை பறி போயுள்ளது என்பது உண்மை. ஜிஎஸ்டியில் பல சிக் கல்கள் உள்ளன. இதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களே இதற்கு ஆதாரம். எனவே, ஜிஎஸ்டியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை டிடிவி தினகரன் புறக்கணிக்கவில்லை. அந்த விழா கட்சி சார்பில் நடத்தப்படவில்லை. மாறாக, அரசு சார்பில் நடத்தப்பட்டது. டிடிவி தினகரன் விரைவில் கட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்று கட்சிப் பணிகளை மேற்கொள்வார். அவருக்கு மக்கள் ஆதரவு உண்டு. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு மேல் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். இதற்கான பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜும் நேற்று தினகரனை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தினகரனுக்கு ஏன் அழைப்பு இல்லை, ஏன் அவரை மதுரைக்கு அழைக்கவில்லை. நிகழ்ச்சி நடத்தியவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆட்சிப் பணியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்ளட்டும். கட்சிப் பணியை தினகரன் பார்த்துக் கொள்ளட்டும் என்பதே தொண்டர்களின் உணர்வாக உள்ளது’’ என்றார்.