ஆக.,15ல் காஷ்மீரில் தேசிய கொடி ஏற்றுகிறாரா அமித்ஷா?

ஆக.,15ல் காஷ்மீரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவ்வாறு திட்டம் எதுவும் இல்லை என அரசு தரப்பு வட்டாரங்கள் மறுத்துள்ளன.

நாட்டின் 73வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி (ஆக.,15) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததுடன், காஷ்மீர், லடாக் என மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவையும் பார்லி.,யில் நிறைவேற்றியது. இதனால், காஷ்மீரில் வரும் சுதந்திரதினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள, லால் சவுக்கில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, அமித் ஷா தேசிய கொடி ஏற்றுவார் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஆக.,15ல் உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீருக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன