அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு- பியூஷ் கோயல் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைக்காக அவர் இன்று சென்னை வந்துள்ளார்.

அவரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த கட்சி உறுப்பினர்கள் வரவேற்றனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமித்ததற்கு அதிக மகிழ்ச்சி கொள்கிறேன். இடைக்கால நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் சமர்ப்பித்து விட்டு வந்துள்ளேன்.

தமிழகத்தில் அமைய உள்ள கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான் வந்துள்ளேன்.

தமிழக மக்கள் மீது அதிக அக்கறை கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின் இளைஞர்கள், மகளிர் ஆகியோரது வருங்காலம் நன்றாக இருக்க பிரதமர் மோடி அதிக அக்கறை கொண்டுள்ளார்.

தேர்தலுக்கு பின் அமையும் அமைச்சரவையில் அதிக அளவிலான தமிழக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம் என்று கூறினார்.

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து ஆலோசனை என்ற தகவலை மறுக்க முடியாது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அமையும் கூட்டணி வலுவான ஒன்றாக இருக்கும். இது பிரதமர் மோடிக்கு வலிமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.