அ.தி.மு.க பிளவுக்கு பிறகு ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம்

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பா.ஜ.க., தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவரது கட்சியைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது. காங்கிரஸ், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று, ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்செய்ய உள்ளார். முன்னதாக, அவருக்கு மத்திய அரசு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கலின்போது, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். மேலும், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க முதலமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்ள உள்ளார்.அ.தி.மு.க பிளவுக்கு பிறகு   முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் முதல் முறையாக இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பாரதீய ஜனதா ஜனதா கட்சி வேட்பாளரை முன் மொழிபவர்களில் பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.ராம்நாத் தாக்கல் செய்ய உள்ள வேட்பு மனுவில் ஓபிஎஸ் கையெழுத்திட்டுள்ளார்; ராம்நாத்தை முன்மொழிந்து ஏற்கனவே வேட்புமனுவில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

நாங்கள் எடுத்த முடிவை தான் பன்னீர்செல்வம் அணியும் எடுத்திருப்பதால் அதிமுகவில் பிளவு இல்லை என்பது தெரிய வருகிறது.பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு என்பது சசிகலா  உள்பட அதிமுக தலைமை இணைந்து எடுத்த முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.