அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் மதுசூதனன் அறிக்கை

அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணி அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் மறைவினால் ஏற்பட்ட துக்கம், கழகத் தொண்டர்களின் மனதை விட்டு  இன்னும் மறையவில்லை.அம்மாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தை விட்டு இன்னும் அகலவில்லை.

அம்மாவின் மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத் தத்தின் குரல்.

விசுவாசத் தொண்டர்களின், அம்மாவின் மேல் குறையாத பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதி பலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சசிகலாவின் புகைப்படங்களை அ.தி.மு.க. அலுவலகமான தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.