அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

திருத்தணியை அடுத்த ராமாபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 6½ லட்சம் செலவில் பகுதிநேர ரே‌ஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சூர்யநகரம் ஊராட்சியில் உள்ள ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்.

இதையடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுபற்றி நடவடிக்கை எடுக் கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கஜலட்சுமி புரம் சூர்யநகரம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதற்காக திருத்தணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நரசிம்மன் வந்து இருந்தார்.

இதுபற்றி அறிந்த ராமாபுரம் கிராம மக்கள் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திறக்கப்படாத ரே‌ஷன் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நரசிம்மன் எம்.எல்.ஏ. அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். திடீரென அவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை வீசி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் நரசிம்மன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். ரே‌ஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதனால் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.