அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை பேச்சுவார்த்தை 7 பேர் குழுவினருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைவது குறித்து நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் நேற்று 7 பேர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

இரட்டை இலை சின்னம்

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு அமைச்சர்களின் அ.தி.மு.க. அம்மா அணி ஆகிய 2 அணிகளும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இணைவதற்கு முடிவு செய்துள்ளன.

2 அணிகளும் ஒன்றாக இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சில நிபந்தனைகளை முன்வைத்தனர். அந்த நிபந்தனைகளின் பேரில், டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து டி.டி.வி. தினகரன் குடும்பத்தை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தர்ம யுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.

முட்டுக்கட்டை

இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்பின் வெற்றிக்கே இவர்கள் தான் காரணம் என்பார்கள் போல’’ என்று கூறினார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பதிலடி கொடுத்தார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தம்பிதுரையை கடுமையாக விமர்சித்தார். மேலும், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடவே இதுபோல் பேசுவதாகவும், முதல்–அமைச்சர் பதவியையும், பொதுச்செயலாளர் பதவியையும் நாங்கள் கேட்கவில்லை. ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும், சசிகலா குடும்பத்தை வெளியேற்றவேண்டும் என்றுதான் கேட்டோம் என்றும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

முரண்பாடான கருத்துகள்

இதுபோன்ற காரசாரமான முரண்பாடான கருத்துகளால் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடப்பது சந்தேகமே என்ற நிலை உருவானது. ஆனால் ஜெயக்குமார் பேசியதை பெரிதாக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. அம்மா அணியினர் தெரிவித்தனர். மேலும் அணிகள் இணைவது குறித்து 2 அணியினரும் கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும், அ.தி.மு.க. அம்மா அணியில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

இந்த நிலையில் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், தனது அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவினருடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பிற்பகல் 1.30 மணி வரை நடந்தது.

அப்போது, அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையின்போது தங்கள் தரப்பில் இருந்து என்னென்ன நிபந்தனைகளை முன்வைக்கவேண்டும். 2 அணிகளும் ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டதுபோல எப்படி இணைந்து செயல்படவேண்டும்? என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை எப்போது நடக்கும்? உங்கள் தரப்பில் இருந்து என்னென்ன நிபந்தனைகள் முன்வைக்கப்படும்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘பேச்சுவார்த்தை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்’’ என்று பதில் அளித்தார்.

நாளை பேச்சுவார்த்தை

இதற்கிடையே அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா மற்றும் அ.தி.மு.க. அம்மா அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அல்லது வேறு ரகசிய இடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெறும் நாள், இடம், நேரம் குறித்து 2 அணியினரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

பேச்சுவார்த்தை இழுபறி அடைந்ததற்கான காரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:–

இழுபறிக்கு காரணம் என்ன?

சசிகலா குடும்பத்தையே கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் புகைப்படத்தையும், அவர் படம் உள்ள பதாகைகளையும் அகற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆனால் அவர்கள் அகற்றுவதில் தாமதம் காட்டி வருகின்றனர். இதனாலேயே பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதனை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்று கூறியுள்ளதால் பேச்சுவார்த்தையை நடத்த ஒப்புக்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.