அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ரூ.1.5 கோடி பரிசு மழை: சீறிப் பாய்ந்த காளைகளை போராடி அடக்கிய வீரர்கள்- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்று உற்சாகப்படுத்தினர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட முரட்டுக் காளைகள், எதிர்த்து நின்று மல்லுக்கட்டிய வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. அதுபோல் சீறிப் பாய்ந்து வந்த பல காளைகளை வீரர்கள் பலர் திறமையாக பிடித்து அடக்கி சாகசம் செய்தனர். ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வரும், துணை முதல்வரும் கார்களை பரிசாக வழங்கினர்.

தைத்திருநாளில் மதுரை அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங் கல் அன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடைபெறும்.

நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கமான நாளில் சிறப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் கமிட்டி மற்றும் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 1,241 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ரவுண்டிலும் 100 வீரர்கள், வெவ்வேறு சீருடைகளில் வாடிவாசலில் களம் இறக்கப்பட்டனர். ஒருமுறை 2 மாடுகளுக்கு மேல் பிடித்த வீரர்கள், அடுத்த ரவுண்டிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் போட்டியை தொடங்கி வைக்க காலை 8.10 மணி அளவில் வாடிவாசலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் தலைமை வகித்தார்.

அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, விவி ராஜன் செல்லப்பா உள்ளிட்ட ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அதி முக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வாடிவாசலில் முதலில் முனியாண்டி கோயில் காளைகள் பூஜை செய்து அவிழ்த்து விடப்பட்டன. அந்த மாடுகளை யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை, இலங்கை அமைச்சர் தொண்டைமான் காளை, தமிழ் நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலை வர் பி.ஆர்.ராஜசேகர், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குருசங்கர் காளை உள்ளிட்ட தமிழகத்தில் தலைசிறந்த 150 ஜல்லிக்கட்டு காளைகள் உட் பட மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை, காளைகள் தூக்கி வீசி பந்தாடிவிட்டுச் சென்றன. சிறந்த காளைக்கும், அதிக மாடுகளைப் பிடிக்கும் வீரருக்கும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் கார்கள் பரிசாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுபோக ஒவ்வொரு காளையை அடக்கிய வீரருக்கும், அவர்களால் அடக்க முடியாத காளைகளுக்கும் விழா கமிட்டி சார்பில் பைக், தங்கக் காசு, வெள்ளிக்காசு, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், பீரோ, பட்டுச்சேலை, அண்டா, பித்தளை பானை, கட்டில் உட்பட சுமார் ரூ.1.5 கோடிக்கு பரிசுகளும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் ஒவ்வொரு காளைக்கும், வீரருக்கும் 10 வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

வாடிவாசலில் இருந்து ஆவேசமாக துள்ளிக்குதித்து வெளியேறிய சில காளைகள், வீரர்களை கண்டு ஓடாமல் அவர்களை ஓடவிட்டன. அப்போது பார்வையாளர்கள் பெரும் ஆரவாரம் செய்து காளைகளையும், வீரர்களையும் உற்சாகப்படுத்தினர். சில காளைகள் வீரர்களை கொம்பால் தூக்கி 10 அடி உயரத்துக்கு வீசிவிட்டு புழுதி பறக்க எல்லைக்கோட்டை நோக்கிச் சென்றன. அப்போது விழா கமிட்டியினர், ‘மாட்டைத் தொட்டுப்பாரு, மனதைப் போல பரிசுகளை வாங்கிக்கோ, ஒரு மாட்டை பிடித்தால் கல்யாண சீர்வரிசைப் பொருட்களையும், ஒரு குடும்பத்துக்குத் தேவையான பொருட்களையும் ஒரே நேரத்தில் வாங்கிச் செல்லலாம்’ என்று மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

சில நேரம் தொடர்ந்து காளை கள் பிடிபடாமல் சென்றதால், பரிசுப் பொருட்களை அதன் உரிமையாளர்கள் பெற்றுச் சென்றனர். உடனே விழா கமிட்டியினர், ‘பரிசுகளை ஃபுல்லா மாட்டுக்காரங்க வாங்கிப் போறாங்க, மாடுபிடி வீரர்களுக்கு வெறும் பொங்கல் மட்டும்தான் கிடைக் கும் போல..’ என நையாண்டி செய்தனர். ஆக்ரோஷமடைந்த வீரர்கள் உடனே காளைகளை அடக்கத் தொடங்குவார்கள். இப்படியாக ஜல்லிக்கட்டுப் போட்டியை விழா கமிட்டினர் விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் நடத்தினர்.

ஆரம்பம் முதல் கடைசி வரை பரிசுமழையில் மாடுபிடி வீரர்களும், காளையின் உரிமையாளர்களும் நனைந்தனர். நேற்று முன்தினம் பாலமேட்டில் பார்வையாளர் ஒருவர் இறந்ததால் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கட்டுப்பாடாக நடத்தப்பட்டது. இதனால் உயிர்ச் சேதம் இல்லை. ஆனால், பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். போட்டியின் முடிவில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் முதல்வர், துணை முதல்வர் அறிவித்த கார்கள் பரி சாக வழங்கப்பட்டன.