அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இழந்தது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது.

‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

புதியதாக கொண்டு வரப்பட்ட ‘ரிசர்வ் டே’ விதிப்படி இன்று மீண்டும் போட்டி தொடர்ந்து நடந்தது. ராஸ் டெய்லர் (74), லதாம் (10), ஹென்றி (1) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். ரோகித் சர்மா (1), கோஹ்லி (1), லோகேஷ் ராகுல் (1) விரைவில் கிளம்பினர். தினேஷ் கார்த்திக் 6 ரன் எடுக்க, ரிஷாப் பன்ட், பாண்ட்யா தலா 32 ரன் எடுத்தனர். அடுத்து தோனி, ஜடேஜா இணைந்தனர்.

போராடிய ஜடேஜா 77 ரன்னுக்கு அவுட்டானார். தோனி (50) ரன் அவுட்டாக இந்தியாவின் தோல்வி உறுதியானது. புவனேஷ்வர் (0), சகால் (5) கைவிட்டனர். இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 18 ரன்னில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இரண்டாவது முறையாக (2015, 2019) முன்னேறியது.