அருண்ஜேட்லியுடன் விஷால், பிரகாஷ்ராஜ் சந்திப்பு: விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தல்

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்தனர். அப்போது, டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் வறட்சி மற்றும் விவசாயக்கடன் உட்படப் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பிரகாஷ்ராஜ், நடிகர் ரமணா, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டியராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தனர்.

ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்ட விவசாயிகளை நேரில் சந்தித்தனர்.

விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்தனர். அவரிடம் விவசாயிகள் பிரச்சனையை குறிப்பிட்டு மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகையில், “மத்திய அரசு சார்பில் இதுவரை போராடும் தமிழக விவசாயிகளை எவரும் வந்து சந்திக்காதது வருத்தத்தை அளிக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுடன் தமிழகத்தை சேர்ந்த இவர்களும் பாதிக்கபட்டுள்ளனர். இவர்கள் பிரச்சனையை தேசிய ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட வேண்டும். நிதி அமைச்சரிடம் வேண்டிய போது ஆவன செய்வதாக உறுதி அளித்தார். இத்துடன் நிற்காமல் விவசாயிகள் பிரச்சினை தீரும் வரை நாம் அவர்களுக்கு ஆதரவளிப்போம்” எனத் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு உதவ விஷாலின் யோசனை

மகராட்டிராவின் விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகமாகி வந்தது. அப்போது, அவர்களில் 112 விவசாயிகளுக்கு வங்கிக் கடன் ரூபாய் 39 லட்சம் செலுத்தி பாலிவுட் நடிகர் அமிதாப்பசன் உதவி இருந்தார். இதைபோல், தமிழ் திரைப்பட உலகமும் தமிழக விவசாயிகளுக்கு எதுவும் செய்யுமா என விஷாலிடம் ‘தி இந்து’ கேள்வி எழுப்பியிருந்தது. இதை மனதில் கொள்ளும் வகையில் விஷால் ஒரு புதிய திட்டம் வகுக்க முயன்று வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து விஷால் கூறுகையில், “பொதுமக்கள் தங்கள் பணம் கொடுத்து திரையரங்குகளில் படம் பார்க்கிறார்கள். இதில், பொதுமக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என ஒவ்வொருவரிடன் கால்களை பிடித்து கெஞ்சி நான் ஒரு விஷயம் கேட்க உள்ளேன். இதில் ஒரு ரூபாய் அல்லது பத்து ரூபாயை நம் விவசாயிகளுக்காக ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வேன். இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தமிழகம் திரும்பி அனைவரிடமும் ஆலோசனை செய்வேன்” எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் பிரச்சனையில் விஷால் உட்பட நடிகர்கள் பலர் பிரதமர் நரேந்தர மோடியையும் சந்திக்க முயன்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.