அருணாச்சலேஸ்வரர் கோயில் பக்தர்களுக்காக 545 மரங்களை வெட்டி தங்கும் விடுதி கட்டுவதா?- வைகோ கண்டனம்

அருணாச்சலேஸ்வரர் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்காக 545 மரங்களை வெட்டி அகற்ற அனுமதி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ஆணாயப் பிறந்தான் கிராம எல்லையில் உள்ள சோணநதிதோப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி அரசு ஆணை பிறப்பித்து உள்ளார். அதற்காக அங்கே உள்ள 545 மரங்களை வெட்டி அகற்றவும் அனுமதி அளித்துள்ளார்.

பக்தர்கள் தங்கும் விடுதி அமைப்பதற்கு ஏற்ற வேறு பல இடங்கள் இருக்கும்போது, கிரிவலப் பாதையில் உள்ள பசுஞ்சோலையான சோணநதித் தோப்பு வனத்தை அழிக்க முற்படுவது ஏன் என்று திருவண்ணாமலை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கெனவே, இதுதொடர்பான வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. இந்தவழக்கில், மார்ச் 28-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவசர அவசரமாக இந்து சமய அறநிலையத்துறை சோணநதித் தோப்பு மரங்களை அழித்து அங்கு தங்கும் விடுதி அமைக்க அனுமதி அளித்தது எதற்காக?.

சோணநதித் தோப்பில் வில்வமரம், கடம்பை மரம் உள்ளிட்ட தல விருட்சங்கள் அனைத்தும் மிகப் பழமையானவை. இந்த வனத்தில் அரிய வகைப் பறவைகள், மயில்கள், மான்கள், மரநாய்கள் போன்ற உயிரினங்களும் இருக்கின்றன. சோணநதித் தோப்பு வனத்தை அழிப்பதன் மூலம் சுற்றசூழலும், உயிர் சூழல் சங்கிலியும் அழிந்துவிடும் என்பது இந்து சமய அறநிலையத்துறை அறியாததா?

ஆளும்கட்சியினர் சிலரின் தலையீடு இதில் இருப்பதால், அரசு உயர் அதிகாரிகள், விதி மீறல்களை பொருட்படுத்தாமல் பாதுகாக்கப்பட்ட பசுமைப் பகுதியை அழிப்பதற்குத் துணை போகின்றனர்.

தமிழக முதல்வர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அரசு ஆணையைத் திரும்பப் பெற வேண்டும். சோணநதித் தோப்பில் உள்ள மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும். அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வேறு இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதியை அமைக்க வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.