அரபு நாடுகளுடன் இஸ்ரேல் நெருக்கமாகிறது !!

இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திங்கள்கிழமை முதல் அதிகாரப்பூர்வ விமானம் சென்றிருப்பது, ஒரு வரலாற்று நிகழ்வாகும். கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி உடன்படிக்கையின் பின்னணியில் பரஸ்பர உறவுகளை இயல்பாக்குவதற்கான முதலாவது முறைப்படியான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும் இது.

இஸ்ரேலிய அதிகாரிகளோடு கூடவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் விமானத்தில் இருந்தார். விமானத்தில் இருந்து கீழே இறங்கிவரும்போது, “மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) க்கான புதிய அத்தியாயம் இது” என்று கூறினார்.

இந்த புதிய அத்தியாயத்தை எழுத உதவிய ஜாரெட் குஷ்னர் ( அவர் ஒரு யூதரும் கூட), இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் எப்போதும் உடனிருந்தார். இந்த உடன்படிக்கை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அரசியல் அட்டவணைகளில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயனடைகின்றன. இஸ்ரேலின் அங்கீகாரம் ,பிராந்தியத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும். பாதுகாப்பு மற்றும் சைபர் சூப்பர் பவர் துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இஸ்ரேலின் உதவி கிடைக்கும். கூடவே, நவம்பர் 3 அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர்களுக்கு முன்னால், மத்திய கிழக்கின் அமைதி தூதராக டொனால்ட் ட்ரம்ப் தம்மை முன்னிறுத்திக்கொள்வார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன், இஸ்ரேலின் முறைசாரா பரிமாற்றங்கள் சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த பிராந்தியத்தில் இரானின் சக்தி அதிகரித்து வருவதால் வளைகுடா நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது. ஒமான், பஹ்ரைன் ஆகியவையும் இதற்கு உதாரணங்கள்.