அரசு ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அரசுடன் பேச்சு நடத்திய பின் ஊழியர் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு அளித்த உறுதியை தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போராட்டத்தை யொட்டி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாலுகா அலுவல கங்களில் பாதிப்பு கடுமையாக இருந்தது.

வட்டாட்சியர், துணை வட்டாட் சியர் உள்ளிட்டோரும் அலுவல கத்துக்கு வராததால் சாதிச்சான்று, வருமானச்சான்று, விதவை சான்று, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். அதேபோல், வட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) அலு வலகங்களிலும் அரசு சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. முதல் நாளைப் போன்றே அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி நேற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகை யில் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு, பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை

பின்னர், அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது. கூட்டம் முடிந்ததும் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த் தைக்கு அழைத்தது. அமைச்சர் கள் செங்கோட்டையன், டி.ஜெயக் குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இந்த பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில், ஊதியக்குழு அறிவிப்புக்கு முன்பாக அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்து ஊதியக் குழுவின் முடிவு செயல்படுத்தப்படும் என்றும், சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக் காலமாக ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்வது தொடர்பாக ஜூலை மாதத்துக்குள் ஆய்வுசெய்து முடிவு எடுக்கப் படும் என்றும் வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்தது.

கோரிக்கைகள் தொடர்பாக அரசு அளித்த உறுதியின் பேரில் எங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜுலை மாதம் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.