அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்குகிறது: காவிரி விவகாரம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக கர்நாடகா காங்கிரஸ் அரசு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தருமபுரியில் நடந்து வரும் ஆர்எஸ்எஸ் பண்பு பயிற்சி நிகழ்ச்சியை பார்வையிட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தருமபுரி வந்தார். நிகழ்ச்சியை முடித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரியில் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும். தமிழகத்தின் விவசாயத்தைக் காக்க வேண்டும். தமிழகத்தின் நீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு துரதிருஷ்டவசமாக பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறது. இதற்கு தமிழக காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சியான திமுக-வும் கைகோர்த்து செயல்படுவதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை.
தண்ணீர் கிடைக்காத போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்கவில்லை. தமிழகத்தில் தொடர்ந்து மழை பொய்த்தால் இதை விட மோசமான நிலை ஏற்படும். இதை மனதில் கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும்.
நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் என கூறுகின்றனர். தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை தேர்வு வேண்டாம் என்ற முறையை கொண்டு வந்தது யார்? இதனால் தான் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. சுமார் 2,000 பள்ளிகள் மூடப்பட உள்ளன. மற்றொரு புறம் புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகி வருகின்றன. கல்வி ரீதியாக தமிழக மாணவர்களை அழிக்கும் செயலாக இந்த நடைமுறை இருந்து வருகிறது.