அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – பிரதமர் மோடி

60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் அயோத்தி பிரச்சினை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. ஏனெனில் உச்ச நிதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்  17  ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதற்குள் தீர்ப்பு அளிக்கப்படாவிட்டால் மீண்டும் வழக்கு முதலில் இருந்தே விசாரிக்க வேண்டி இருக்கும்.
முன்னதாக அயோத்தி வழக்கை சமரச குழு மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சமரச குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, பாஜக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மோடியின் ஆட்சிக் காலத்திற்குள்ளாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பேசிய பிரதமர் மோடி, ‘அயோத்தி விவகாரத்தில் யாரும் முதிர்ச்சியற்ற தன்மையுடன் பக்குவமில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். இந்தியாவின் உச்சபட்ச நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் மீதும், சட்டத்தின் நடைமுறைகள் மீதும் தலைவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்றார்.