அயோத்தி வழக்கு விசாரணை; அக்.,17 ல் முடிக்க உத்தரவு

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் அனைத்து வாதங்களையும் அக்.,17 க்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இதன் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், வாதங்களை முன் வைப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட நீட்டிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இந்நிலையில், அயோத்தி வழக்கில் திடீர் திருப்பமாக அனைத்து தரப்பு வாதங்களையும் வருகிற 17ஆம் தேதிக்குள், அதாவது ஒரு நாள் முன்னதாகவே முடிக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் நவம்பர் 17 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அதற்குள் அயோத்தி வழக்கில் விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும் என ரஞ்சன் கோகாய் நினைக்கிறார். எனவே, பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் மாதத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.