அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் தி மு க குண்டர்களால் சூறை

சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.குண்டர்களால் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த ‘அம்மா உணவகத்தில்’ நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் சென்று, உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களை துாக்கி வீசினர். மேலும், வெளியே வைத்திருந்த அம்மா உணவகம் என்ற பலகையை கிளித்து எறிந்து, போட்டோவை வீசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பெயர் பலகை, பொருட்களை சீரமைக்கவும், திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஏழை எளியோருக்காக துவங்கப்பட்ட அதிமுக.,வின் ‛அம்மா உணவகத்தை’ திமுக.,வினர் சூறையாடிய நிகழ்வுகள் நடைபெற்று ஒருநாள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நாகையில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நாகை மாவட்டம் அவரிக்காட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‛அம்மா மினி கிளினிக்’ கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.