அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு : கண்டனம் தெரிவிக்க டிரம்ப் மறுப்பு

உலகின் மிகப் பெரும் அணு சக்தி உடைய நாடுகளான, அமெரிக்கா – ரஷ்யா இடையே, பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக, அந்நாட்டின் உளவுத்துறை குற்றஞ்சாட்டியது.இது தொடர்பாக, ரஷ்ய உளவாளிகள், 12 பேர் மீது, அமெரிக்க நீதிமன்றத்தில், சமீபத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தவிர, சிரியாவில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும், அமெரிக்கா – ரஷ்யா இடையே, கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச விரும்புவதாக, கடந்த மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடின் விருப்பம் தெரிவித்ததார்; இதை, டிரம்பும் ஏற்றுக்கொண்டார்.இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒரு வார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்பை, பின்லாந்தில் புடின் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.ரஷ்ய தலைநகர், மாஸ்கோவில் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நேற்று முன்தினம் காலை, தனி விமானம் மூலம், ஹெல்சின்கி நகருக்கு புடின் சென்றார்.டிரம்பும், புடினும் பின்லாந்து அதிபர் மாளிகையில் சந்தித்தனர். ஒருவரையொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இரு தலைவர்களும் முதன் முதலாக, தனிப்பட்ட முறையில் இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினர்.பின் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து, டிரம்பும், புடினும் பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பு, 90 நிமிடம் நீடித்தது.பின், புடினும், டிரம்பும் சேர்ந்து, நிருபர்களை சந்தித்தனர். அப்போது புடின் கூறியதாவது:பனிப்போர் காலம் முடிந்து விட்டது. இப்போது ரஷ்யாவும், அமெரிக்காவும் புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன. வட கொரியா பிரச்னையில் சுமுக தீர்வு காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ‘அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா’ என, டிரம்ப் கேள்வி எழுப்பினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா ஒருபோதும் தலையிட்டது இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்தேன்.

என்னை, டிரம்ப் நம்புகிறார்; அவரை, நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.அதிபர் டிரம்ப் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில், நல்ல சூழல் நிலவவில்லை. இப்போது, இணைந்து செயல்படுவதற்கான நேரம் வந்து விட்டது. இந்த சந்திப்பு, தனிச்சிறப்பு வாய்ந்த உறவை ஏற்படுத்தும் என, உறுதியாக நம்புகிறேன்.அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா தலையிடவில்லை என, புடின் உறுதிபட தெரிவித்தார். அமெரிக்க தேர்தலில், ரஷ்யா தலையிட வேண்டிய அவசியம் இருப்பதாக நானும் கருதவில்லை.இது பற்றிய விசாரணை தேவையற்றது. அமெரிக்கா – ரஷ்யா உறவை சீரழிக்க நடக்கும் சதி, இது.இவ்வாறு டிரம்ப் கூறினார்.அமெரிக்க உளவுத் துறையை நம்பாமல், ரஷ்யாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசியதற்கு, அமெரிக்காவில் பலர், கடும் எதிர்ப்பு தெரிவித்து

உள்ளனர்.