அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசும் 2-வது உச்சிமாநாடு வியட்நாமின் ஹனோய் நகரில் வருகிற 27, 28 தேதிகளில் நடக்கிறது. இதற்காக கிம் ஜாங் அன், 24 ஆம் தேதி மாலை தலைநகர் பியாங்காங்கில் இருந்து தனக்கான சிறப்பு ரெயிலில் வியட்நாமுக்கு புறப்பட்டார்.

இரண்டரை நாள்கள் பயணம் செய்த கிம் ஜாங் அன், சீனா வழியாக இன்று வியட்நாம் வருகை தந்தார். சந்திப்பு நடைபெறும் ஹனோய் நகருக்கு, கார் மூலமாக பயணம் மேற்கொண்டார். கிம் ஜாங் அன்னுடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, தனது டுவிட்டரில் பதிவிட்ட டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபருடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்து இருந்தார். டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசும் டோங் டாங், நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.