அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஏமி கோனி பாரெட் தேர்வு

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, ஏமி கோனி பாரெட், 48, பதவியேற்றார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், ஒன்பது நீதிபதி பணியிடங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்பவர், இறக்கும் வரை, அந்தப் பதவியில் தொடர்வது வழக்கம். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஒருவரை, அதிபர் நியமிக்கலாம். அந்த நியமனத்துக்கு, அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரூத் பேடா கின்ஸ்பாக், 87, உடல்நலக் குறைவு காரணமாக, சமீபத்தில் காலமானார். இதையடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த, ஆமி கோனி பாரெட்டை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, அதிபர் டிரம்ப் நியமித்தார்.இந்த நியமனத்துக்கு, செனட் நிலைக்குழு ஒப்புதல் வழங்கியது. செனட் சபையில், நேற்று முன்தினம் நடந்த ஓட்டெடுப்பில், ஆமி கோனி பாரெட் நியமனத்துக்கு, 52 – 48 என்ற ஓட்டு வித்தியாசத்தில் ஒப்புதல் கிடைத்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஏமி கோனி பதவியேற்றார். அவருக்கு, நீதிபதி தாமஸ் கிளாரென்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஏமி கோனி கூறுகையில், ”அரசியலமைப்பையும், சட்டத்தையும் பின்பற்றுவதைத் தவிர, வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை” என்றார்.