அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இன்று நேருக்கு நேர் விவாதம் !!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையேயான, முதல் நேருக்கு நேர் விவாதம் இன்று நடக்க உள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலின்போது, தங்கள் கொள்கைகள், சாதனைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து, இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். முதல் முறையாக, 1960, செப்., 26ல், ஜான் எப் கென்னடி மற்றும் ரிச்சர்ட் நிக்சான் இடையே இது போன்ற விவாதம் நடந்தது. அதன்பின், இதுபோன்ற விவாதத்தை நடத்துவதற்காக, சி.பி.டி., எனப்படும் அதிபர் விவாதக் கமிஷன் என்ற அரசு சாரா அமைப்பு உருவாக்கப்பட்டது.

latest tamil news

கடந்த, 1987ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 1988 தேர்தலில் இருந்து, இதுபோன்ற விவாதத்தை நடத்தி வருகின்றது.இந்தாண்டு மொத்தம் மூன்று விவாதங்கள் நடக்க உள்ளன. அதில் முதல் விவாதம், ஓஹியோ மாகாணத்தின் கிளெவ்லாண்டில், இன்று இரவு நடக்க உள்ளது. ‘பாக்ஸ் டிவி’ என்ற செய்தி சேனலின் பிரபல தொகுப்பாளர் கிரிஸ் வாலஸ், இந்த விவாதத்தை நடத்த உள்ளார்.இதைத் தொடர்ந்து, அக்., 15ல் புளோரிடா மாகாணத்தின் மியாமியிலும், அக்., 22ல், டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லேயிலும் விவாதங்கள் நடக்க உள்ளன.

அமெரிக்க வாழ் சீக்கியர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தலிபான் பயங்கரவாதிகளாக அவர்கள் பார்க்கப்படுகின்றனர். சீக்கிய மக்களின் ஓட்டுகளை கவரும் வகையில், ‘பிடனுக்காக அமெரிக்க சீக்கியர்’ என்ற புதிய இயக்கத்தை, ஜோ பிடன் ஆதரவாளர்கள் துவக்கியுள்ளனர். சீக்கியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக, அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஜோ பிடனின் மகன் ஹண்டர் மற்றும் அவரது குடும்பதாருக்கு, ரஷ்யா மற்றும் சீனாவில் இருந்து கோடிக் கணக்கில் பணம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள பத்திரிகைகள், இது குறித்து செய்தி வெளியிடாமல் மறைக்க முயல்கின்றன.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர்