அமெரிக்காவும், இந்தியாவும், மகிந்த ராஜபக்சாவை பிரதமராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து தனித்தனியாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர். அமெரிக்காவும், இந்தியாவும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாத நிலையில், மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன், இருதரப்பு பாதுகாப்பு உறவுகள், திட்டங்களின் எதிர்காலம் குறித்தே பேச்சுக்களை நடத்தியிருக்கின்றன.

இது எவ்வாறு சாத்தியம் என கொழும்பில் உள்ள வெளிநாட்டு அரசியல் தொடர்பான விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்புகள், பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளன. இந்தியத் துணைத் தூதுவர் கலாநிதி சில்பக் அம்புலே தலைமையிலான இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டார்.

அதேவேளை, புதிதாகப் பதவியேற்ற அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்சும், கடந்த திங்கட்கிழமை, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணைத் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ரணில்-மைத்திரி கூட்டு அரசாங்கத்துடன் அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தியிருந்தன. தற்போது, ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களினால், இந்த உறவுகள், ஒத்துழைப்புகளின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.