அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க மறைமுக போரை துவக்கும் சீனா !!

சீன துாதரக அலுவலகங்களை மூடும் நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளதை அடுத்து, பதிலடி கொடுக்க சீனாவும் தயாராகி வருகிறது.

‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டது. அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது’ என, சீனா மீது, அமெரிக்கா குற்றம் சாட்டியது.இதற்கு, சீனா கடும் மறுப்பு தெரிவித்தது. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, தென் சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருவதை தடுக்கும் வகையில், இரண்டு போர் கப்பல்களை, அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வந்த, சீன துாதரக அலுவலகத்தை, அமெரிக்கா அதிரடியாக மூடியது. அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அமெரிக்கா அறிவித்தது.விஞ்ஞானி தலைமறைவு இதற்கிடையே, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சீன துாதரக அலுவலகத்தில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானியான டாங் ஜுவான் பதுங்கியுள்ளதாகவும், அவருக்கு, சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், திடுக்கிடும் தகவலை அமெரிக்கா தெரிவித்துள்ளது

.டாங் ஜுவான், சீன ராணுவத்துடன் தனக்குள்ள தொடர்பை மறைத்து, மோசடியாக, ‘விசா’ பெற்றதாகவும், தற்போது அவர் தலைமறைவாகி விட்டதாகவும், அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இவர், அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை திருடும் மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒரு தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். மூடு விழா தொடரும்!இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:கொரோனா வைரஸ் போன்ற பல விஷயங்களில், சர்வதேச சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகள் தொடரும். ஹூஸ்டனில் செயல்பட்டு வந்த சீன துாதரக அலுவலகத்தை மூடுவதற்கு, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, அமெரிக்காவின் மற்ற நகரங்களிலும் உள்ள சீன துாதரக அலுவலகங்கள் மூடப்படும். அமெரிக்க மக்களின் அறிவுசார் சொத்துரிமை, தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும் விதமான இந்த நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு, அவர் கூறினார். அமெரிக்காவின் அடுத்தடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகள், சீன அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்கும், மறைமுக போரை துவக்குவதற்கும் சீனா தயாராகி வருவதாக, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.