அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – நம்பிக்கையை இழக்கும் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிபர் டிரம்பின் கருத்துகள், அமெரிக்கர்களிடம் நம்பிக்கையை இழந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தும் டிரம்பின் யோசனையை பெரும்பாலானோர் நிராகரித்துள்ளனர். கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கொரோனா நோயாளிகள் உடலில் கிருமிநாசினி அல்லது புற ஊதா கதிர்களை செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்துபேசியதோடு, சுகாதார அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறியிருந்தார். டிரம்பின் யோசனைக்கு மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் அவற்றை செலுத்தி கொள்ள வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் டிரம்ப் அதனை நகைச்சுவையாக கூறியதாக பல்டி அடித்தார். ஆனாலும் டிரம்பின் செல்வாக்கு காரணமாக சில அமெரிக்கர்களுக்கு விஷத்தை உட்கொள்ள தூண்டுமென சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் ராய்ட்டர்ஸ் – இப்சோஸ் அமைப்புகள் இணைந்து ஏப்.27 -28ம் தேதிகளில் ஆன்லைனில் கருத்து கணிப்பை நடத்தின. அமெரிக்கா முழுவதும் இருந்து 1,001 பேர் கருத்து கணிப்பில் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதில் 416 ஜனநாயக கட்சி மற்றும் 419 குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் அடங்கும். இந்த கருத்துகணிப்பில், பாதிக்கும் குறைவான அனைத்து இளைஞர்களும் அதாவது 47 சதவீதம் பேர் கொரோனா குறித்த டிரம்பின் பரிந்துரைகளை மிகவும் அல்லது ஓரளவு பின்பற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட சர்வே உடன் ஒப்பிடுகையில் டிரம்பின் அறிவுரையை பின்பற்றுவோர் 15 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டால் கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்த முயற்சி செய்ய மாட்டோமென 98 சதவீதம் அமெரிக்கர்கள் கூறியுள்ளனர். இதில் 98 சதவீதம் ஜனநாயக கட்சியினரும், 98 சதவீதம் குடியரசு கட்சியினரும் அடங்குவர். இது கொரோனா குறித்த பதட்டம் அதிகரித்துள்ள நேரத்திலும் ,டிரம்பின் யோசனையை அமெரிக்கர்கள் ஒருமனதாக நிராகரித்துள்ளதை காட்டுகிறது.பெரும்பாலான அமெரிக்கர்கள், கொரோனா எப்படி பரவுகிறது என்பது குறித்து கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக டிரம்பின் செல்வாக்கு கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் மாறவில்லை. 43 சதவீதம் அமெரிக்கர்கள், அதிபராக டிரம்பின் செயல்பாடுகளை ஆதரவாகவும், அதே அளவுக்கு கொரோனாவை கையாளும் பணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒருவேளை இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றால், பதிவான ஓட்டுகளில் 44 சதவீதம் பேர் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடெனுக்கும், 40 சதவீதம் பேர் டிரம்புக்கு ஆதரவாக ஓட்டளிப்போமென கூறியுள்ளனர்.