அமெரிக்காவில் ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை இன்னமும் உலுக்கி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா பாதிப்பில் முதலிடம் வகிக்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜுலை மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும் மறுபுறம் தொற்று பரவலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 354- பேருக்கு அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் 853- பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 74 ஆயிரத்து 659-ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 5 லட்சத்து 92 ஆயிரத்து 409- ஆக உள்ளது.