அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு அலபாமாவில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. பேரிடர் நிவாரண படையினர் உடனடியாக அங்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூறாவளியானது ஜார்ஜியா, தெற்கு கரோலினா மற்றும் புளோரிடா ஆகிய நகரங்களிலும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குழந்தைகளும் உள்ளனர். பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நகரங்களில் பல வீடுகள் இடிந்து விழுந்தும், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தும், கார்கள் புரண்டும் கிடக்கின்றன. மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து காணப்படுகின்றன. மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன.

அலபாமா மற்றும் அருகில் உள்ள ஜார்ஜியா மாகாணங்களில் 20 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.