அமர்நாத் யாத்திரை: யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் உடனே திரும்பி செல்ல அரசு எச்சரிக்கை

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

ஸ்ரீநகரில் நிருபர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும், அந்த பகுதியில் பிடிபட்ட பயங்கரவாதியிடம், இலக்கை நோக்கி துல்லியமாக சுட உதவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினர். பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் உள்துறை செயலர் ஷலீன் காப்ரா பிறப்பித்த உத்தரவு: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கக் கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்ரீகர்கள், காஷ்மீரில் தங்கும் நாட்களை குறைத்து கொள்ள வேண்டும். உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை நாட்கள்குறைக்கப்படும் என ஒருதகவல் வெளியாகியுள்ளது.