அப்துல் கலாம் நினைவிடத்தை திறக்க பிரதமர் மோடி ராமேசுவரம் வருகை: தென் மண்டல ஐ.ஜி நேரில் ஆய்வு

ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவிடத்தை திறக்க பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ல் ராமேசுவரம் வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேக்கரும்பில் தென் மண்டல ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ஷில் லாங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக் கொண்டிருந்த போது மரணமடைந்தார். அவரது உடல் கலாமின் பிறந்த ஊரான ராமேசுவரத்திற்கு அருகே உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக் கம் செய்யப்பட்டது.

பின்னர், பேக்கரும்பில் மணி மண்டபம் கட்டப்படும் என 2015-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி கலாமின் 84-வது பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அறிவித்தார்.

தொடர்ந்து கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கான பணிகளை அமைச் சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் ராமேசுவரம் அருகே பேக்கரும்பு கலாம் நினைவிடத்தில் துவக்கி வைத்தனர்.

பேக்கரும்பில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கலாம் நினைவிடத்தில் அருங்காட்சியகம், பூங்கா, வாகனம் நிறுத்துமிடம், அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டு இறுதி கட்ட த்தை எட்டியுள்ளன. இந்த மணி மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி கலாமின் 2-ம் ஆண்டு நினைவுநாளான வரும் ஜூலை 27-ம் தேதி திறந்துவைப்பார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை மத்திய, மாநில காவல் மற் றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கலாம் நினைவிடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய நேற்று பேக்கரும்பு வந்த தென் மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், கலாம் மணிமண்டபப் பணிகளை மேற்கொண்ட டிஆர்டிஓ நிறுவன அதிகாரிகள், டி.ஐ.ஜி பிரதீப்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் மற்றும் விழா நடைபெற உள்ள இடங்களை காவல்துறை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் பார்வையிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ் கூறுகையில், “கலாம் நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க வரும் வி.வி.ஐ.பிகளின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளேன். விழா பற்றிய முழுமையான அறிவிப்பு வந்தவுடன் அதற்கு தகுந்தவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்படும் என்றார்.