அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை: மருத்துவமனையில் ஜெ. உறவினர் தீபா ஆவேசம்

சென்னை – அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய அத்தைப் பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் தீபா ஜெயகுமார் ஆவேசமாக கூறினார்.
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை முன்பு அதிமுகவினர் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா ஜெயக்குமார் நள்ளிரவில் மருத்துவமனை வந்தார்.
அவர் மருத்துவமனை வளாகத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியது:
“என் அத்தையைப் பார்ப்பதற்காக இங்கே வந்தேன். என்னை மருத்துவமனைக்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. ஏன் என்றே எனக்குத் தெரியவில்லை.
நான் வழக்கமாக போயஸ் தோட்டத்தின் இல்லத்தில் என் அத்தையை அவ்வப்போது நேரில் சந்திப்பேன். ஆனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் ஆன பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை.
இப்போதும் இங்கே வந்திருக்கிறேன். என் அத்தையைப் பார்க்க அனுமதிக்கவில்லை. காரணமே தெரியவில்லை. ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. மீடியாவுடனும் பேசக் கூடாது என்று கட்டளையிடுகிறார்கள்” என்றார் தீபா.

முன்னதாக, அப்போலோ மருத்துவமனையின் பிரதான வாயில் அருகே போலீஸாருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டது கவனிக்கத்தக்கது.