அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் எம்எல்ஏ.,க்கள்

கட்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிமுக.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தலில் வெற்றிப்பெற்று 10 ஆண்டுகளாக அதிமுக எம்எல்ஏ.,வாக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2011-ல் வெற்றி பெற்றபோது முதலில் வருவாய்த்துறை அமைச்சராகவும், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்படியிருக்கையில் அவருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமார் என்பவருக்கு அதிமுக ‛சீட்’ கொடுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாசலம், அவருக்கு எதிராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். இவருக்கு இந்த முறை போட்டியிட அனுமதி மறுத்து, சந்திரன் என்பவரை அதிமுக நிறுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த சந்திரசேகரன், இன்று (மார்ச் 18) சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சந்திரசேகரனை அதிமுக.,வில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் திருப்பட்டினம் திமுக எம்எல்ஏ கீதா ஆனந்தன் இன்று சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக சார்பில் போட்டியிட தியாகராஜன் என்பவருக்கு வாய்ப்பு தரப்பட்டதால், அவரை எதிர்த்து கீதா ஆனந்தன் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.