அதிமுக இரு அணிகளும் டெல்லியில் முகாம்: பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – முதல்வர் கே.பழனிசாமி இன்று சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் கே.பழனிசாமியும் பிரதமரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் தலைமையில் 6 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை நேற்று சந்தித்து நீட் தேர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தினர்.

தொடர்புடையவை

இதற்கிடையே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவரைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமியும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரு தரப்பினரும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வருடன் அமைச்சர்களும் சேர்ந்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அனுமதி கிடைத்ததும், பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோருகின்றனர்.

ஓபிஎஸ் சந்திப்பு

டெல்லியில் தங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுதவிர, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் திட்டம் ஆகியவற்றால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கினார்.

இந்த சந்திப்பின்போது, மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை எம்எல்ஏ, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவை காரணமாக வைத்து அதிமுகவின் இரு அணியினரும் டெல்லியில் முகாமிட்டு பிரதமரை சந்திப்பது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.