அணிகள் இணைப்பு குறித்து பேச 2 அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு?

60 நாட்கள் கெடு முடிந்து வருகிற 5-ந்தேதி முதல் தீவிர சுற்றுப்பயணத்துக்கு தினகரன் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் செல்ல போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

டி.டி.வி.தினகரன் தனது வியூகத்தை தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றே தனது அதிரடியைத் தொடங்கி விட்டார். இன்று மாலை அவர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார்.

அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பத்திரிகைத் தொடர்பாளர்கள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு எத்தகைய அதிரடியான பதிலடியை கொடுப்பது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

எனவே எடப்பாடி பழனிசாமி இன்று மாலை நடத்தும் ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டி.டி.வி.தினகரனை ஓரம் கட்டும் வகையில் இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது தவிர அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை இணைத்துக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பது பற்றி தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை 2 அமைச்சர்கள் சந்தித்து பேசியதாகவும். அணிகள் இணைந்த பிறகு கட்சியை வழி நடத்தும் பொறுப்பு ஓபிஎஸ்சிடம் வழங்கப்படும் என பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.