அடுத்த ஜனாதிபதியாக தம்மைச் சார்ந்தவர் வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற வேளையில் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தாலும் இராணுவக் கொடியவர்களாலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பாரிய படுகொலைகள், கற்பழிப்புக்கள், அங்கங்களை வெட்டி எறிந்து தமிழ்ப் போராளிகளை அங்கவீனர்களாக்கியமை ஆகியவை போன்ற கொடிதான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கா பலர் போராடுகின்றார்கள். இந்த நோக்கத்தோடு, உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் ஜெனவாவில் கூடியிருந்தும், ஆராய்ந்தும் தேவையான அமர்வுகளில் அதற்காககுரல் கொடுத்தும் வருகின்றார்கள்.
அதே போன்று இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்று வாதிட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டால்,  இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு காத்திருப்பவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கும் அனைத்து தரப்பினரும் ஜெனிவாவில் கூடியிருந்து எமது நியாயமான குரல்களை நசுக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இவர்களின் பல கட்சிகளைச் சார்ந்தவர்களும் உள்ளார்கள். இந்த வேளையில் ரணில் விக்கிரமசிங்க என்னும் குள்ளநரி, அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்கவும் பலர் முயன்று வருகின்றார்கள். அவர்களில் சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரோடு, தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளார்கள் என்பதை ஜெனிவாவில் இருந்து எமக்குக் கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இது இவ்வாறிருக்க, தண்டனை விடுவிப்புநிலை இலங்கையில் நீடிப்பதால் எதிர்காலத்தில் சிறுபான்மைமக்களுக்கு அது பாதகமாக அமையும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசலெட் அம்மையார் எச்சரித்துள்ளார். கடந்த கால வன்முறைகளுடன் தொடர்புடையவர்களை தண்டனையிலிருந்து விடுவிப்பதானது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வன்முறைகள் இடம்பெறும் சாத்தியப்பாடுகளை அதிகரிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா. மனிதஉரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறல் தொடர்பானதனதுஅவதானிப்புகள் தொடர்பில் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசலெட் அம்மையார் உரையாற்றினார்.  இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மை வினைத்திறனான விசாரணை அவசிமாகும். இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன. ஐ.நா. சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார்.  இந்த வகையான அதிகாரிகள் இன்னமும் அங்கு கடமையாற்றுவதால் எமது கோரிக்கைகள் வலுப்பெறுவதன் மூலம் குற்றமிழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாம் உறுதிப் படுத்தும் வகையில் எமது வாதங்களைத் தொடரவேண்டும்.