அசாதாரணமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

‘துக்ளக்’ வார இதழின் 47-வது ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு புகழஞ்சலி செலுத்தும் விழாவாக நடைபெற்றது.விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சிங்கம் போல இருந்த அவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலமில்லாமல் இருந்து வந்தார். மருத்துவமனையில் அவர் படும் துயரங்களைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது.

‘நான் இருக்கும் வரை நீங்கள் இருக்க வேண்டும்’ என சோவிடம் ஜெயலலிதா கூறினாராம். இதனை சோவே என்னிடம் கூறினார். அதுபோல ஜெயலலிதா இருக்கும் வரை சோ இருந்தார். அவர் மறைந்த மறுநாளே சோ மறைந்தார்.

சோ மறைந்தபோது பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. ஆனால், இப்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையைப் பார்க்கும்போது அவர் இல்லையே என வருத்தம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் அவர் இருந்திருந்தால் அவரது கருத்துக்களை கூறியிருப்பார்.

சோ எனக்கு மிகச் சிறந்த நண்பராக, ஆலோசகராக விளங்கினார். நான் பெருமையாக நினைக்கும் விஷயம் இது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியபோது இது மிகப்பெரியதாக வளர்ச்சி அடையும். எனவே, சென்னை அணியை வாங்குமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், நான் வாங்கவில்லை. அப்போது சில லட்சங்களில் இருந்த ஐபிஎல் அணி அப்போது பல ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

மொரார்ஜி தேசாய், சந்திரசேகர், வாஜ்பாய் முதல் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அனைவரும் சோவின் நண்பர்கள். பிரதமர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் சிக்கலான நேரங்களில் சோவிடம் ஆலோசனை கேட்பார்கள். சோவிடம் ஆலோசனை கேட்காத அரசியல்வாதிகளே இருக்க மாட்டார்கள்.

நகைச்சுவை உணர்வு மிக்க சோ துணிச்சலானவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களைக் கூட தனது நகைச்சுவை, துணிச்சலால் கலாய்த்துள்ளார். சோவின் பலம் அவரது உண்மைதான். அதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

47 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையை நடத்துவது மிகப்பெரிய சவாலான விஷயம். அதனை சாதித்துக் காட்டியவர் சோ ராமசாமி. அவர் இல்லாத ‘துக்ளக்’ இதழை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நேர்மையான, ஊழலற்ற, தேசிய அரசியல் கொள்கைகளுக்காகவே சோ போராடினார். அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகர், பேச்சாளர், விமர்சகர், வழக்கறிஞர் என பன்முகத் திறமை கொண்டவர். அவரைப் போல ஒருவரை நான் கண்டதில்லை. சோவை தவிர்த்து விட்டு இந்தியாவின் வரலாற்றை எழுத முடியாது.

சோவின் பணியைத் தொடர ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி மற்றும் அவரது குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

விழாவில்துக்ளக்ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேசியதாவது:

தமிழக அரசியல் இன்று திசைமாறி தறிகெட்டு போய்க் கொண்டிருக்கிறது. இதனை நாம் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். குடும்ப அரசியலை மிகக் கடுமையாக எதிர்த்தவர் சோ. தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப அரசியலுக்கு இருந்தது. ஆனால், இப்போது இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க் கொண்டிருக்கிறது.

சோவின் பாதையில் பயணிக்கும் ‘துக்ளக்’ இதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. பலர் என்னிடம் வந்து ‘உங்களுக்கு ஏன் இந்த வம்பு?’ என கேட்கின்றனர். மற்றவர்கள் பயப்படுவதால் நான் குடும்ப அரசியல் பற்றி எழுதுகிறேன். எல்லோரிடமும் ஒருவித பயம் தெரிகிறது. எதிர்த்து பேசக் கூடாது என நினைக்கிறார்கள். இது தமிழகத்துக்கு நல்லதல்ல. ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. இதற்கெல்லாம் மாற்று மருந்தாக ‘துக்ளக்’ இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.